Saturday, October 25, 2014

ஒளிப்பதிவாளர் அசோக் குமார் - அஞ்சலி

அசோக் குமார் அஞ்சலி - எ.அ.பாலா
பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் உடல் நலக்குறைவால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையும், வீடுமாக இருந்ததை செய்திகளில் வாசித்திருப்பீர்கள். மே மாதம் சாவின் விளிம்பு வரை சென்றவர் அதிலிருந்து மீண்டு தீபாவளி தினமன்று (அக் 22, 2014) தனது 70-வது வயதில் காலமானார்.

அறுபதுகளில் தொடங்கி ஒரு 30 ஆண்டுகள் இந்தியாவின் தலைசிறந்த 5 ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருந்தார் என்று தாராளமாகக் கூற முடியும். அவரது கேமரா வழிப் பார்வை அத்தகையது. அவரது மேஜிக் லென்ஸ் வழியாக பார்த்து பார்த்து நமக்கு பல அரிய பொக்கிஷங்களை வழங்கியிருக்கிறார் அசோக் குமார் அகர்வால்! அவரது ஸ்பெஷாலிட்டி, சினிமாவுக்காக அவர் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் ஒரு போதும் உறுத்தவே உறுத்தாது.

ஜானி, உதிரிப்பூக்கள் படங்களுக்கு ராஜாவின் இசை எந்த அளவுக்கு பலம் சேர்த்ததோ, அதற்கு குறைவில்லாமல் பலம் சேர்த்தது அசோக்கின் கேமரா என்பதை பலரும் ஏற்றுக் கொள்வர். கதை, திரைக்கதை, நடிப்பு ஆகியவற்றில் மிகச் சிறந்த படங்கள் கூட காலத்தால் அழியாமல் மனதில் நிற்க இசையும், ஒளிப்பதிவும் மிக முக்கியமானவை. ஜானி, உதிரிபூக்கள், மஞ்சில் விரிஞ்ச பூக்கள் (மோகன்லாலின் முதல் படம்), மெட்டி போன்றவை அந்த வகையைச் சார்ந்தவை. அசோக் வெற்றி விழா, நடிகன், சூரியன், மன்னன், ஜீன்ஸ் என்ற மசாலா படங்களுக்கும் அழகாக ஒளிப்பதிவு செய்திருப்பார். அவரது Back Light -ல் படம் பிடிக்கும்  திறமை அசாதாரணமானது!

அசோக் குமார் 1980-ல் ”நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கியவர். எவ்வளவோ தமிழ் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்..... இந்தியாவின் முதல் 3-டி படமான மை டியர் குட்டிச்சாத்தானின் ஒளிப்பதிவாளரும் கூட. பல மலையாளப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். தமிழ்நாடு, கேரள மாநில அளவில் விருதுகளும், நந்தி விருதும் வாங்கியிருக்கிறார். Back Waters என்ற ஆங்கிலப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் பாலு மகேந்திராவுக்கு பிடித்த ஒளிப்பதிவாளர் என்பதே மிகப்பெரிய விருது தான்.

எவ்வளவோ மனதைத் தொட்ட காட்சிகள் உண்டு. சட்டென்று தோன்றிய சில:

உல்லாசப்பறவைகள் (ஜெர்மனியின் செந்தேன் மலரே... கண்ணில் நிற்கிறது)
ஜானி (இசையும் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு 2 தூண்கள்)
நெஞ்சத்தைக் கிள்ளாதே (லேசான பனி விழும் காலையை, “பருவமே புதிய பாடல் பாடு” பாடலில் அவர் அற்புதமாக படம் பிடித்திருப்பார்.. எப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும் நாஸ்டால்ஜியா தான்)
மெட்டி (சந்தக்கவிகள் பாடும் மனதில் இன்பக்கனவுகளே!)

நிற்க.... அவர் மறைவு குறித்து அசோக் குமாரின் மகன் ஆகாஷ் பேசியதை வாசித்ததில் மனது கனமாகி விட்டது!

ஒரு வாரம் முன்பு அசோக் குமார் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்ததும், கடந்த வாரம் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆகாஷ் தமிழ்த்திரையுலக சங்கங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலருக்கும் தனது தந்தையின் நிலைமை குறித்து செய்தி அனுப்பியும், அவரது இறுதிக் காலத்தில், கடினமானதொரு சூழலில் ஆதரவு அளிக்குமாறு வேண்டியும், குறிப்பிடும்படியாக ஒருவரும் அசோக்கை சென்று பார்க்கவுமில்லை, அவர் இறுதிச்சடங்குக்கும் எடிட்டர் லெனின், இன்னும் சிலர் தவிர்த்து யாரும் செல்லவும் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

ஆகாஷ் “என் அப்பா புகழின் உச்சியின் இருக்கையில், எத்தனையோ டைரக்டர்கள், நடிகர்கள், அவரிடம் விவாதிக்கவும், அவருடன் பணியாற்றும் வாய்ப்புக்காகவும், வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தது என் அம்மாவுக்கு ஞாபகமிருக்கிறது! இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த யாரும் வராததைப் பார்க்கையில், எப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை! என் தந்தையின் ஆசிர்வாதத்தைப் பெற வராதவர்களுக்கு கொடுப்பினை இல்லை என்பதாக எடுத்துக் கொள்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். எடிட்டர் லெனினும் அசோக் குமாரின் இறுதிச்சடங்குக்கு யாரும் வராதது குறித்து வருந்தியதாகத் தெரிகிறது.

இத்தனை சோகத்திலும், ஆகாஷை தேற்றும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழுக்காக, தமிழில் மனு எழுத வேண்டியிருந்தது. அந்த அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறுகடையின் உரிமையாளரை ஆகாஷ் உதவிக்கு அணுகியபோது, பெயரைக் கேட்ட மாத்திரத்தில், மாலை நாளிதழ் ஒன்றை எடுத்துக் காட்டி, அதில் வந்திருந்த மரணச்செய்தியில் இருந்த அசோக் குமார் தான் ஆகாஷின் தந்தையா என்று அவர் வினவியிருக்கிறார். ஆகாஷ் ஆமோதித்தவுடன், அந்த சிறுகடை உரிமையாளர் மிகவும் மகிழ்ந்து, உதிரிப்பூக்கள் படத்தில், அசோக் குமார் பூக்களை பலவிதமாக, அழகாக படம் பிடித்ததை நினைவு கூர்ந்தாராம்! “This is my Dad's Legacy" Akash related.

ஏதோ ஒரு விதத்தில், கேமரா வழிக் காட்சிகள் வாயிலாக என்னை/நம்மை மகிழ்வித்த அசோக் குமார் என்ற ஜீனியஸின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

--எ.அ.பாலா

1 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

டெஸ்ட் பின்னூட்டம்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails